அந்தக் கணநேரம் அவரென்ன நினைத்தாரோ! அருகி லிருந்தோரின் அணைப்புக்காய்த் தவித்தாரோ! சொந்தமின்றித் தனியாகக் கொடும்நரகைக் கண்டாரோ! சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் துடித்தாரோ!
வெற்றி என்றால் என்ன? வெற்றியை அடையும் ரகசியம் என்ன என்பது பற்றி ஆவேசமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்பா அங்கே எதேச்சையாக வந்தார். அப்பா எப்பவுமே – ராமர் முடிசூட்டு விழாப் பரபரப்பை மொட்டை மாடியிலிருந்து பார்த்த மந்தரை போலவோ, வனவாசத்தில் ராமரும் சீதையும் ரமித்திருந்த வேளையில் தற்செயலாக அங்கே முளைத்த சூர்ப்பனகை போலவோ மட்டுமல்லாமல், ஒருசுற்று தபஸ் முடிந்து கொஞ்சம் ஆயாசமும் கொஞ்சம் லஹிரியுமாய், எப்போதும் போலவே எதேச்சையாய் வந்தார்.
வெற்றி என்றால் என்ன, வெற்றியின் ரகசியம் யாது என்னும் விவாதத்தில் அவரையும் இழுத்தார்கள். ஆவலாய்ப் பார்த்த அப்பாவின் வாயிலிருந்து உதிர்ந்த திருவாசகத்தை நீ்ங்களும் கேட்க வேண்டாமா?
“அட போங்கலே! ராத்திரி முழிப்பு வந்து, துப்புரவா பாத்ரூம் போய்ட்டு வந்தா, அதத்தான் நான் முழு வெற்றியா கொண்டாடுவேன்!” என்றபடி நகர்ந்தார் நமுட்டுச் சிரிப்புக்காரர்.
பிடிவாதம் பிடித்து, விமானத்தில் ஓர இருக்கையைப் பிடித்துக் கொண்டதே அப்பாவின் மகனான என் வெற்றி ரகசியம் என்பதைத்தான் இத்தனை ரத்தினச் சுருக்கமாக உங்களுக்குச் சொல்ல வந்தேன்.
‘அடப்பாவி! இதுக்காடா இந்த ஜவ்விழுப்பு!’ என்று நீங்கள் கதறுவது கேட்கிறது! நல்ல வேளை, அதை நான் ரசித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லை!!
நம்மை சுலபமாக்கிக் கொண்டால் எல்லாம் சுலபமாகிவிடும் என்பதே என் அனுபவம். அவ்வளவுதான்.
********
இப்படித்தான் ஒரு 21 மணி நேரப் பறத்தலையும், இடையில் விட்டு விட்டு ஒரு ஆறுமணி நேரக் காத்திருப்பையும், சென்னையிலும், நியூ ஜெர்சியிலும் இன்னும் ஒரு 5 மணி நேரத்தையும் கடந்தேன்.
எமிரேட்ஸ் விமான சேவை எப்போதும் போல இன்முகம், நேர்த்தி, நல்லுணவு (அது எப்படித்தான் அரை ஸ்பூன் சோறு தர முடிகிறதோ!) நேரக் கடைபிடிப்பு, சுத்தம் என்று சுகமாயக் கழிந்தது.
துபாயில் இறங்கி, காலைக் கடன் முடிந்து, ஒன்பது அமெரிக்க டாலர் கொடுத்து , ஒரு உழக்கு எக்ஸ்பிரசோ குடித்து, அடுத்த பிளைட்டைப் பிடித்து கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் இறங்கும் வரை என்ன செய்து கொண்டிருந்நதேன்?
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஓர இருக்கை என்றாயே? எந்த இருக்கையாய் இருந்தாலென்ன என்னை வேடிக்கை பார்க்க?
பார்க்கப் பார்க்க உல்லாசம்! ஆச்சரியம்! வெட்கம்! பிரமிப்பு! பயம்! மதிப்பு! சித்தப் பிரமை! களைப்பு! ஒரு வெட்டவெளித் திளைப்பு!
Yes, what a spectacle we are if only we care to take one good look at us! Interesting, intriguing, embarrassing, exhausting, stunning, surprising, hilarious and everything culminating in a fatigue tinged relief that dissolves in the vastness of the inner space.
ஏதென்ஸ் விமான நிலையம் அளவில் சேலம். அழகில் ஆரம்ப கட்டம். அங்கிருக்கும் கிரேக்கர்கள் பார்க்கவும், பழகவும் எளியர், இனியர். அவர்கள் எழுத்துக்கு எழுத்து, ஒரு ‘த்’ தை அழுத்திப் பேசும் ஆங்கிலம் எனக்கென்னமோ வசீகரமாக இருந்தது.
பெரும் கும்பலாக ஒரு கிரேக்கக் குழு விமானத்தையே தங்கள் உற்சாகத்தால் குலுக்கினார்கள்.
‘என்ன, எல்லா டிரெய்லரையும் பாத்தாச்சா?’ என்று விவேக் பாரதி கேட்டிருந்தான். இந்த முறை சுரத்தில்லை. கண்ணில் ஒரு மங்கல். எப்போதும் ஒரு காய்ச்சல் தறுவாய், களைப்பு.
இருந்தும் அந்த பூஜா ஹெக்டேவுக்காக ‘ரெட்ரோ’ படத்தை முழுசும் பார்த்தேன். அதற்கொரு டிரெய்லர் இருந்திருக்கலாம். அப்புறம், புஷ்பா 2 பாதிவரை சகித்துக் கண்ணயர்ந்தேன்.
ஏதென்ஸ் விமானத்தில் ஏறும் வரிசையில் ஒரு பெண்மணியின் கூந்தலை கவனித்தீர்களா? பழங்காலச் சிற்பமொன்று செல்போன் மீது மோகம் கொண்டு கிளம்பி, தலையலங்காரம் புறப்பட்டதே என்று அம்பிகாபதி பாட்டை நான் சத்தமாகப் பாட முயன்று, வரவர என்னைத் தடுக்க நான் பாடாய்ப் படவேண்டி இருக்கிறது.
நியூஜெர்சி குடியேற்றத்தில் – இம்மிகிரேஷன்தான் ஓய் – பேய்க்கூட்டம். ஆனால் நன்றாய்த்தான் நகர்ந்தது.
வரிசையில் ஓர் அமெரிக்கன், கவுண்டர்காரியிடம் ஏதோ சிரித்தபடிதான் பேசிக் கொண்டிருந்தான். அவள் அவனை அப்படியே மடக்கி, பக்கத்து அறையிலிருந்த மேலதிகாரியிடம் ஒப்படைத்தாள்.
போகும்போது, ‘கொஞ்சம் இரு, நான் திரும்பி வருகிறேன’ எனபதை, வந்து ஒனக்குப் பொங்கல் வெக்கிறேன் இருடீ!’ என்ற பாணியில் சொல்லிவிட்டுப் போனாளா, அப்படியே சிலையாய் நின்றிருந்தேன்.