இன்று இருக்கிறோம்! இதோ இருக்கிறோம்!
இதைவிட அதிசயம் ஏதுமில்லை
இன்றே முடியலாம் இப்போதே முடியலாம்
இதைவிட நிதர்சனம் எதுவுமில்லை
நின்று கொல்வதே ஆண்டவன்
நிற்காமல் கொல்வதே ஆணவம்
என்று முடிப்பானோ என்பதே தெரியாமல்
எப்போதும் தொடர்வதே எமனின் நிழல்…
கயிலையைக் காண்பதற்காய்க் கால்கடுக்க நடந்தவர்கள்
கணநேரம் இமைக்கும் முன்னே காணாமற் போய்விட்டார்கள்
முயற்சியே வாழ்க்கையென்று மூன்றுவேளை உழல்வோர்கள்
மொத்தமாய்க் கொத்துக் கொத்தாய் முயலாமல் முடிந்தார்கள்
அந்தக் கணநேரம் அவரென்ன நினைத்தாரோ!
அருகி லிருந்தோரின் அணைப்புக்காய்த் தவித்தாரோ!
சொந்தமின்றித் தனியாகக் கொடும்நரகைக் கண்டாரோ!
சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் துடித்தாரோ!
மரணத்தின் வாயிலிலே வாழ்க்கைக்குப் பொருளென்ன?
மடிகின்ற ஒருகணத்தில் மானிடத்தின் நிலையென்ன?
கரம்கூப்பித் தலைகுனிந்து கண்மல்கி நிற்கின்றோம்
காணாமல் போனவர்க்காய்க் கரையோரம் பாடுகிறோம்..
ரமணன்
27.08.26/வியாழன்/8.45

Leave a Reply